×

மழை, வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் தவிப்பு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தகவல்

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் நடுவழியில் நிற்பதால் சுமார் 1,000 பயணிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு, அங்கங்கே ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி திருச்செந்தூரில் இருந்து இரவு சென்னைக்கு கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூர் – திருநெல்வேலிக்கு இடையே ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளம் மூழ்கியதால் நேற்று இரவு 9.20 மணி முதல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ரயிலில் இருந்து வெளியே இறங்க முடியாமல் பயணிகள் பரிதவித்து வந்தனர். பின்னர் இந்த ரயிலில் இருந்து சுமார் 1000 பயணிகள் ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியே எங்கும் செல்ல முடியாததால் ரயில் நிலைய நடைமேடையில் துணிகளை காய வைத்து பயணிகள் தஞ்சமடைந்துள்ளனர்.

அங்குள்ள பயணிகளில் பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமுள்ளதால் உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் பயணிகள் உதவி கோரியுள்ள நிலையில் பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அடிப்படை தேவையான உணவு மற்றும் நீர் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பயணிகளை அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மழை, வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் தவிப்பு: அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Srivaikunda ,Railways Thoothukudi ,Railway ,Dinakaran ,
× RELATED வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது